ஹைதராபாத்: அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டா குரூஸ் பகுதியில், புலம்பெயர் இந்தியர்களிடையே, ராகுல் காந்தி உரையாற்றிய போது, பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அவர்களை கூலாக டீல் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு, அவர்களை இன்முகத்துடன் வரவேற்கவும் செய்தார்.
அவர்கள் ஜோடோ ஜோடோ என்று கோஷமிட்ட போது, ராகுலும், அவர்களுடன் இணைந்து, பாரத் ஜோடோ என்று உரக்க சொன்னார். காங்கிரஸ் கட்சி, அனைவரையும் அனுசரித்து செல்லும் கட்சி என்றும், எதிர்கருத்து உள்ளவர்களைக் கூட, அன்பு மற்றும் பாசத்தை காட்டி வரவேற்கும் கட்சி என்று, தான் சமீபத்தில் மேற்கொண்டிருந்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய அவரது சமீபத்திய பாத யாத்திரையே இதற்கு உதாரணம் என்று ராகுல் குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவில், பாரதிய ஜனதா கட்சி, மக்களை, அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி அச்சுறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் அனைவரிடத்திலும் அன்பாகவும், பாசமாகவும் இருப்பவர்கள். யாராவது, எதை சொன்னாலும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை, காது கொடுத்து கேட்போம். நாங்கள் யார் மீதும் கோபப்பட மாட்டோம். அதுதான் எங்களது இயல்பு என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.