டெல்லி: 2021ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளில் பிரதமர் மோடியின் அரசை தொடர்ந்து தாக்குகின்றன. உழவர்கள் போராட்டம், கோவிட்-19 நெருக்கடியைக் கையாளுதல், எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார மந்தநிலை போன்றவை இதற்கு மையப்புள்ளிகளாக இருக்கின்றன.
இருப்பினும், பல மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களையும், நாடு தழுவிய தேர்தல் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தலையும் மனத்தில் வைத்து பிரதமர் மோடி இப்போதே நடவடிக்கையை எடுத்துவருகிறார்.
உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பிரதமர் மோடி தனது அமைச்சகங்களின் செயல்திறனை ஆய்வு செய்துவருகிறார். உத்தரப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் குறித்த வலுவான யூகங்கள் உள்ளன.
பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களின் செயல்திறன், கட்சி அமைப்பு, தலைமை ஆகியவற்றை பிரதமர் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்கிறார். பாஜக அல்லாத ஆட்சி செய்யும் மாநிலங்கள் குறித்தும் அவர் ஆய்வு நடத்தி கட்சித் தலைமையை வலுப்படுத்த முயற்சிப்பார் எனக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும் தோல்வியால் அக்கட்சி சற்றே துவண்டுபோயுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தலைவர்கள் பலர் திருணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவுடன் தொடர்பில் உள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தல் திட்டம்: இப்போதே ஆய்வைத் தொடங்கிய பாஜக! பிரதமர் மோடி அண்மையில் சுவேந்து ஆதிகாரியைச் சந்தித்து 2024 மக்களவைத் தேர்தலைச் எதிர்கொள்ளும் ஒரு ஆயுதமாக மேற்கு வங்கத்தில் வலுவான எதிர்ப்பை உருவாக்குவது குறித்து நீண்ட விவாதம் நடத்தினார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானுடன் இன்று (புதன்கிழமை) பிரதமர் சந்திக்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, பஞ்சாபின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருடன் உழவர்களின் நீண்ட போராட்டம், மோசடிகள் உள்ளிட்ட பல அரசியல் பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை நடத்தினார். மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரும் கட்சித் தலைமையைச் சந்திக்க டெல்லிக்கு வருகிறார்.
அரசியல் வல்லுநர் தேஷ் ரத்தன் நிகாம், கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை மறுஆய்வு செய்வதற்கும், பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டுவருவதற்கும் இந்த மறுஆய்வுக் கூட்டங்கள் அவசியம் என்று கூறினார்.
அமைச்சரவை விரிவாக்கம், பல மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல்களுக்கு மறுஆய்வு தேவை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். தற்போதைய பாஜக அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டுள்ளது என்றும், நேரம் கருதி விரைந்துசெயல்படுவது காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா கூறுகையில், இந்த மறுஆய்வுக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன, இது எந்தவொரு அரசுக்கும் ஆரோக்கியமான பயிற்சியாகும் என்றார்.