ஹைதராபாத்: 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், “தாக்கல் செய்யப்பட்டுள்ளது பட்ஜெட்டா? அது மளிகை கடைகாரின் பில் ஆகும். ஒரு சரியான பட்ஜெட் என்றால் அது அதன் குறிக்கோளை வெளிக்கொணர வேண்டும்.
நாட்டின் ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தைக் குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படையாகக் கூறவும். நாட்டின் பொருளாதார உத்தி, முன்னுரிமைகள், வளங்களைக் கையாளும் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்துக் காட்ட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்த இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வானது மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அண்டை நாடுகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடியில் உதவி.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!