ஜெய்பூர்:அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி பலம் வாய்ந்ததாக இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கானத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.
அதில் மிசோரம் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது.
மேலும், தென்மாநிலங்களில் ஆட்சியை இழந்த பாஜக வட மாநிலங்களில் தனது செல்வாக்கினைத் தக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றி வந்தது. நவம்பர் 25ஆம் தேதி ராஜஸ்தானில் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கரன்பூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காலமானதால் அந்த தொகுதியில் வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியமைக்க 101 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரசுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகளை மாற்றும் எனக் காங்கிரஸ் நம்பிக்கையாக உள்ளது.
ராஜஸ்தானில் 199 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் துவங்கும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா தெரிவித்திருந்தார். அதன்படி காலை 8 மணிக்கு 36 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் துவங்கியது.
தபால் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் மற்ற வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது. சர்தார்பூர் தொகுதியில் போட்டியிட்ட அசோக் கெலாட் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 1998 முதல் முதல் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் ஆறாவது முறையாக அந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
ஜலவர் மாவட்டத்தில் உள்ள ஜால்வர் தொகுதியில் போட்டியிட்டுள்ள சிந்தியா அரச குடும்பத்தைச் சேர்ந்த, பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்னிலை வகித்து வருகிறார். இவர் நான்குமுறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று இரண்டு முறை முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 199 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பாஜக 112 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 71 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கனக்கிரசும், பாஜகவும் மாறி மாறி ஆட்சியமைத்து வந்த நிலையில், தொடர்ந்து ஆட்சி அமைத்து அதனை மாற்ற வேண்டும் என அசோக் கெலாட் செயல்பட்டு வந்த நிலையில், தற்போதைய 12 மணி நிலவரம் பாஜகவிற்குச் சாதகமாகவே உள்ளது. இருப்பினும் அடுத்தடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் தாங்கள் முன்னிலை பெறுவோம் எனக் காங்கிரசார் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
பாஜக தரப்பில் முதலமைச்சர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பாஜக தரப்பில் ஏற்கனவே இரண்டு முறை முதலமைச்சர் பதவி வகித்த வசுந்தரா ராஜே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவாரா அல்லது புதிய முகம் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் 'கார்' வேகத்தை நிறுத்திய 'கை' - கேசிஆரின் 9 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது..!