கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 5 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும் விரைவில் ஆட்சி கலைந்து விடும் என்றும் பாஜக எம்.பி ஷந்தனு தாகூர் பொதுக் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள போங்கான் மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் ஷாந்தனு தாகூர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி ஐந்து மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும், அண்மையில் முடிவடைந்த பஞ்சாயத்துத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல்வேறு முறைகேடுகளை செய்யாமல் இருந்திருந்தால், பாஜக இன்னும் ஆயிரக்கணக்கான இடங்களைக் கைப்பற்றியிருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், மாநில தேர்தல் ஆணையம் உள்பட அனைத்து அரசு இயந்திரங்களும் நடுநிலை மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கையில் ஈடுபட தவறிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் அரசின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் கடைசித் தேர்தலாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான வன்முறையில் 39 மக்கள் கொல்லப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தாக அவர் கூறினார்.