டெல்லி : தலைநகர் டெல்லி முதலமைச்சர் இல்லமான ஷீஸ் மஹாலில் புனரமைப்பு பணியில் முறைகேடு நடந்து இருபப்தாகவும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்து உள்ள நிலையில், தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியான பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வார் என பாஜக எம்.பி மனோஜ் திவாரி தெரிவித்து உள்ளார்.
டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்கு இடையே ஏகப் பொருத்தமாக உள்ளது. இரு தரப்புக்கு இடையே கடும் பனிப் போர் நடந்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மற்றொரு நடவடிக்கையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கூடுதல் தலைவலி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ மாளிகையான ஷீஸ் மஹாலை புனரமைப்பு செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதில் கட்டுமான பணிகளுக்கு ஆரம்பத் தொகையாக 15 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டதாகவும் இறுதியில் 53 கோடி ரூபாய் வரை புதுப்பிப்பு பணிகளுக்கு செலவானதாக அறிக்கை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மாளிகை புதுப்பிப்பு பணியில் ஷீஸ் மஹால் மற்றும் டெல்லி பொதுப் பணித்துறை அமைச்சர் கூட்டாக இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக தலைமை கணக்கு தணிக்கையாளர் விசாரணை நடத்தக் கோரி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளித்த முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.
அதேநேரம் டெல்லி முதலமைச்சர் மாளிகையில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஆன செலவை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்ய ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்க உள்ள நிலையில் விரக்தியின் உச்சமாக இப்படி நடந்து கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து உள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கு, அவசர சட்ட விவகாரம் என அடுத்தடுத்து டெல்லி அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனிடையே பேசிய பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, டெல்லி முதலமைச்சர் இல்ல புனரமைப்பு பணிக்கான செலவு குறித்து இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை தாக்கல் செய்ததும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு செல்வார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க :"வேற்றுமை களைந்து ஆட்சியைக் கைப்பற்றுவோம்.." தெலங்கானா தலைவர்களிடம் ராகுல் வலியுறுத்தல்!