துமகுரு:கர்நாடக மாநிலம் துமகுருவில் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாஜக எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா கோரிய ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் இன்று (மார்ச் 27) அவர் கைது செய்யப்பட்டார். மடல் விருபாக்ஷப்பா, சன்னகிரி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ ஆவார். இவர் கர்நாடகா சோப்ஸ் அன்ட் டிடர்ஜெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இந்த லஞ்ச தொகையில் முதல் கட்டமாக ரூ. 40 லட்சத்தை அவரது மகன் பிரசாந்த் மடல் மூலம் பெறும்போது அவர் போலீசாரிடம் கையும், களவுமாக மாட்டிக் கொண்டார். அதனடிப்படையில் பிரசாந்த் உடன் 4 பேர் மார்ச் 2ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவருக்கு தொடர்பான இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டதில் ரூ. 7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா வழக்கில் முன் ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 7ஆம் தேதி நடந்தது. அப்போது உயர் நீதிமன்றம் ரூ.5 லட்சம் பிணை தொகையின் பேரில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த இடைக்கால ஜாமீன் தொடர்பாக இன்று (மார்ச் 27) மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே. நடராஜன் தலைமையிலான அமர்வு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில், மனுதாரர் ஏ1 குற்றவாளி என்பதற்காக ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் முன்பு வழங்கப்பட்ட முன் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.
வழக்குகளில் முன்ஜாமீன் கோரும் நபர்கள் போலீசாருக்கு உரிய முறையில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், முன் ஜாமீனை ரத்து செய்யலாம் என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், இவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா துமகுரு மாவட்டம் கயடசந்திரா சுங்கச்சாவடி அருகே லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டப்பின் எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா கூறுகையில், "எனக்கு சொந்தமாக 125 ஏக்கரில் திணை விவசாயம் நடந்து வருகிறது. பாக்கு சாகுபடியும் செய்து வருகிறேன். மேலும் பல தொழில்கள் உள்ளன. அதன் மூலம் வந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதற்கான ஆவணங்களை லோக் ஆயுக்தா போலீசாரிம் ஒப்படைத்து, எனது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:குறிவைக்கப்படுகிறாரா அமித் ஷா... தொடரும் பாதுகாப்பு குறைவுகள்... நடவடிக்கைகள் என்ன?