பாட்னா : பிகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற சட்ட மாநாட்டில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். தொடந்து மாநாட்டில் சட்டக் கல்லூரி மாணவர்களுடன் சுப்பிரமணியன் சுவாமி கலந்து உரையாடினார்.
அப்போது பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நிச்சயம் சிறைக்குச்செல்வார்கள் என்று கூறினார். மேலும் ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு கருத்துகளைத் தான் தெரிவித்து வரும் போதிலும், யாராலும் தன்னை கைது செய்து சிறைக்கு அனுப்ப முடியாது என்றும் அவர் கூறினார். நேஷனால் ஹெரால்டு வழக்கில் தாயும், மகனும் ஜாமீனால் மட்டுமே வெளியே இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சட்டக் கல்வி முடித்த கையோடு இந்தியாவுக்கு வந்ததாகவும், பின்னர் இந்திரா காந்தியின் பல்வேறு சட்டங்களுக்கு எதிராகவே தான் இருந்ததாகவும் அவர் கூறினார். இதனால் தன் மீது கோபம் அடைந்த இந்திரா பணியில் இருந்து நீக்கியதாகவும், அப்போது தான் அங்கம் வகித்த ஜன சங்கம் கட்சி தன்னை மாநிலங்களவைக்கு அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நவீன கால கட்டத்தில் சட்டம் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். அடுத்த 50 ஆண்டுகளில், சட்டத் தொழில் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் என்று அவர் கூறினார். உத்தரப்பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமதுவுக்கு பாட்னாவில் ஆதரவு குரல் எழுவது குறித்து பேசிய சுப்பிரமணியன் சுவாமி, நாட்டில் ஜனநாயகம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த கருத்துகளை வேண்டுமானாலும் கூறலாம் என்றும் அதேநேரம் அடிக் அகமது விவகாரத்தில் எழுப்பப்படும் ஆதரவு குரல் சொந்த கைகளால் சொந்தக் கண்களையே குத்திக் கொல்வதற்குச் சமம் என்று கூறினார்.