கரோனா பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகளவில் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இதனை இயக்கி ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கூடாது. அதற்கு பதில் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்று வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை தொடர்பான மனு மீது விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு ஆதரவாக பாஜகவைச் சேர்ந்த குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "நமக்கு ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கலாம். இந்த பெருந்தொற்று காலத்தில் அதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாடு அரசையும் முதலமைச்சரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.