தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எடப்பாடியை நிராகரிக்கும் பாஜக ; முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி! - BJP VS ADMK

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை பாஜக மீண்டும் நிராகரித்துள்ள நிலையில், இரு கட்சிகளுக்கிடையே தொடர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதற்கும், அது குறித்த முடிவுக்கு ஒப்புதல் அளிப்பதற்குமான உரிமை தேசியத் தலைமைக்கே உள்ளது என பாஜக தெரிவித்துள்ளது.

எடப்பாடி
எடப்பாடி

By

Published : Dec 31, 2020, 6:27 AM IST

தமிழ்நாட்டில் பலவீனமாக இருந்தாலும் பெரிய அண்ணன் மனப்பான்மையில் பாஜக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அஇஅதிமுக முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தொடர்ந்து நிராகரித்துவருகிறது. இதனால், இருக்கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அண்மையில், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் பாஜகவுக்கு தற்போதுவரை ஒத்தக் கருத்து ஏற்படவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவை தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களே அறிவிப்பார்கள் என தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

திமுகவுக்கு எதிரான போட்டியில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என நினைக்கும் அதிமுகவுக்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில், அதிமுகவுடனான கூட்டணியை தொடர் பேசுபொருளாகவே பாஜக மாற்றியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட ரவி, "பாஜக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவே முதலமைச்சர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை எடுக்கும். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாஜக நாடாளுமன்றக் குழு முக்கிய முடிவை எடுக்கும்" என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி

பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமலே அதிமுக மூத்த தலைவர்கள் அக்கட்சியை விமர்சித்துள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவை எடுக்கும் உரிமை தங்களுக்கே உள்ளது என பாஜக ஆணவமாக தெரிவித்திருப்பதும் ஆட்சியில் பங்கை கோரியுள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது.

இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் கே.பி. முனுசாமி கூறுகையில், "பெரியார் காலத்திலிருந்தே, திராவிய இயக்கத்தை ஒழித்துக்கட்ட ஒரு ரகசியக் குழு நீண்ட நாள்களாக செயல்பட்டுவருகிறது. தேசியக் கட்சியாக இருந்தாலும் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் அதிமுகவே கூட்டணியை தலைமை தாங்கும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "இரட்டை இலை சின்னத்தை முடக்கி கட்சியை இரண்டாக உடைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுவருகிறது" என்றார். அதேபோல், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, பாஜகவுடனான கூட்டணியில் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தொடர் மாற்றுக் கருத்தை கொண்டிருக்கும் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் இருக்கிறோம் எனக் கூறி சற்று இறங்கி வந்துள்ளது. முன்னதாக, கூட்டணி குறித்த முடிவை தேசியத் தலைமையே எடுக்கும் என பாஜக தெரிவித்துவந்தது. ஆனால், அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி பின்வாங்கிய அடுத்த நாளே, அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் தொடர்கிறோம் என சி.டி.ரவியும் தமிழ்நாடு பாஜக தலைவர் முருகனும் பல்டி அடித்துள்ளனர்.

நட்புணர்வை வளர்க்கும் தலைவர்கள் உள்ளபோதிலும், இருகட்சிகளுக்கிடையேயான உறவில் சிலர் தொடர் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முன்பு பாஜகவுடனான கூட்டணியை உறுதிபடுத்திய அதிமுக தலைமையுமே இதற்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "அதிமுக தலைமை அவசர அவசரமாக கூட்டணியை உறுதிபடுத்தியதே இந்தப் பிரச்னைக்கு காரணம். இது ஒரு தவறான செயல். இதன் காரணமாகவே, பாஜக இதுபோன்று தீவிரமாகப் பேசிவருகிறது. தங்களின் விருப்பப்படி அதிக அளவிலான தொகுதிகளை பாஜக கேட்டுப் பெறும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அது ஏற்றுக் கொள்ளலாம். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வன்னியர்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் பாமக, பாஜகவை விட அதிக வாக்கு வங்கி வைத்துள்ளது. இருப்பினும், பாஜக போல் பாமகவால் செயல்படமுடியாது" என்றார்.

அதே கருத்தை கொண்டுள்ள மூத்த பத்திரிகையாளர் பிரியன், அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கு பாஜக இந்த வியூகத்தை பயன்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, டிடிவி தினகரன்-சசிகலா அணியை கூட்டணியில் சேர்க்க பாஜக பழனிசாமியை வற்புறுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பாஜகவுடன் கூட்டணி சேர்வதில் தொண்டர்களுக்கு விருப்பம் என்ற போதிலும், மத்தியில் இருக்கும் பாஜக பழிவாங்கிவிடும் என்ற அச்சத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் இருக்கிறார்கள்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்

பாஜகவைப் போலவே, அதிமுகவின் பிற கூட்டணிக் கட்சிகளான பாமக, விஜயகாந்தின் தேமுதிக ஆகியவையும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவை தள்ளிப்போட்டுள்ளது. இதனால், கூட்டணி தொடர்வதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details