டெல்லி : பாஜகவின் 44வது நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கொடியேற்றினார். தொடர்ந்து நிறுவனத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டை ஊழல், நெப்போட்டிசம் என்ற வாரிசு அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு சவால்களில் இருந்து விடுவிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. நாட்டில் இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் ஒரு தியாகி. இதுபோல் நாமும் இந்த நாட்டிற்கு உழைக்க வேண்டும். அனுமன் போல் பாஜக பிரதி பலன் பார்க்காமல் உழைக்கிறது. அனுமனைப் போலவே இந்தியாவும் தனது திறனை உணர்ந்து வருகிறது'' என்றார்.
எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியாது என்று கூறிய பிரதமர் மோடி தொலைநோக்கு இலக்குகளை நிர்ணயம் செய்ய முடியாமலும் எதிர்க் கட்சிகள் திணறி வருவதாகவும் சிறிய சாதனைகளில் திருப்தி அடைவதாகவும் கூறினார். பெரிய கனவுகள் மற்றும் பெரிய இலக்குகளை அடைவதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.