ஹைதராபாத்: 119 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநிலத்திற்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னதாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றதிலிருந்தே 119 தொகுதிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தெலங்கானாவின் வடக்கு மண்டலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி எண் 16யைக் கொண்ட காமரெட்டி (Kamareddy) தொகுதி விளங்கியது.
இதற்குக் காரணம் தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறையாக ஆட்சி நடத்திய பிஆர்எஸ் கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகிய இரு முதலமைச்சர் வேட்பாளர்களும் நேரடியாக மோதிக் கொண்டதால் தான் இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.
சந்திரசேகர் ராவ், கஜ்மல் தொகுதியில் களமிறங்கினார், மேலும் அவர் காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் வேட்பாளரான ரேவந்த் ரெட்டியுடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியிலும் போட்டியிட்டார். அதேபோல கோடங்கல் (Kodangal) தொகுதியில் களமிறங்கிய ரேவந்த் ரெட்டியும், கேசிஆர் உடன் மோத வேண்டும் என்பதற்காக காமரெட்டி தொகுதியில் போட்டியிட்டார்.
இரண்டு கட்சித் தலைவர்களும் மோதும் தொகுதி என்பதால் காமரெட்டி தொகுதியின் மீது அனைவரது கவனமும் இருந்தது. சந்திரசேகர் ராவிற்கு கஜ்மலிலும், ரேவந்த் ரெட்டிக்கு கோடங்கல் தொகுதியிலும் வெற்றி கிட்டிய நிலையில் காமரெட்டி தொகுதியில் இருவரில் ஒருவர் தான் வெல்வார்கள் எனக் கருதப்பட்டது.