பெங்களூரு:கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனம் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு மே மாதத்துக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான பணிகளில் பாஜக, காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டன.
அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் இந்தமுறை கர்நாடக தேர்தலில் களமிறங்குகிறது. காங்கிரஸ் எம்பி ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேபோல், பாஜக தனித்து போட்டியிட்டு மீண்டும் வெல்லும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் 8 ஆண்டுகளாக ஐபிஎஸ் பதவியில் பணியாற்றினார். அதன்பின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாடு பாஜகவில் இணைந்தார். அடுத்த சில மாதங்களில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து பாஜகவை வளர்ப்பதற்கு பல கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.