திருவனந்தபுரம்:ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாகப் பறவைக் காய்ச்சல் பரவிவருவதாக மக்கள் அச்சம் அடைகின்றனர். அங்கு 200-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதையும் தவிர்த்துவருகின்றனர்.
இதற்கிடையில், உயிரிழந்த பறவைகளின் சடலங்களை ஆய்விற்காக அம்மாநில அரசு போபாலுக்கு அனுப்பியுள்ளது. இது ஒருபுறமிருக்க தற்போது கேரளாவில் இரண்டு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கேரள மக்கள், இரண்டாம் கட்ட கரோனா அலை, ஷிகெல்லா நோய்த்தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தற்போது அங்கு பறவைக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேரள மக்களை மிகுந்த அச்சத்திற்குத் தள்ளியுள்ளது. மேலும், கேரளாவின் அண்டை மாநிலங்களுக்கும் இந்த அச்சம் பரவியுள்ளது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் குறித்து பேசிய விலங்குகள் நலத் துறை அமைச்சர் கே. ராஜு, "கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தின் நீன்டூர் பகுதியிலும், ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பறவைக் காய்ச்சல் எதிரொலி: ரெட் அலர்ட் விடுத்த ராஜஸ்தான் வனத் துறை