தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் முதல் முறையாக கன்னாபிடியோல் மருந்து கரைசலுக்கு CDSCO அனுமதி! - Cannabidiol medicine gets CDSCO approval

பயோஃபோர் இந்தியா நிறுவனத்திற்கு, கன்னாபிடியோல் வாய்வழி மருந்துக் கரைசலை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கன்னாபிடியோல் சார்ந்த தயாரிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Hyderabadi
இந்தியாவில்

By

Published : May 16, 2023, 7:58 PM IST

ஹைதராபாத்: பயோஃபோர் இந்தியா (Biophor India Pharmaceuticals) என்ற மருந்து நிறுவனம், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2007-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கன்னாபிடியோல் (Cannabidiol) வாய்வழிக் கரைசலைத் தயாரிக்க, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை பெற்றிருப்பதாக பயோஃபோர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கன்னாபிடியோலைப் பயன்படுத்தி வாய்வழியாக அருந்தக் கூடிய மருந்துக் கரைசலைத் (Cannabidiol Oral Solution 100 mg/ml) தயாரிக்கவும், அதனை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெனரா ஃபார்மா (Genera Pharma) மூலம் கன்னாபிடியோல் மருந்துக் கரைசல் தயாரிக்கப்படவுள்ளதாகவும், ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள அதன் அலகுகளில் தயாரிக்கப்படும் என்றும் பயோஃபோர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கன்னாபிடியோல் மருந்துக் கரைசல் நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கன்னாபிடியோல் சார்ந்த ஒரு மருந்துப் பொருளுக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த மருத்துக்கு அனுமதி கோரி, அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திலும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த மருந்து தொடர்பாக பயோஃபோர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெகதீஷ்பாபு ரங்கிஷெட்டி கூறும்போது, "கன்னாபிடியோல் மருந்துக் கரைசல் முற்றிலும் செயற்கை வேதியியல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. கை, கால் வலிப்பு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கு கன்னாபிடியோல் வாய்வழி கரைசலை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல சில மருந்து நிறுவனங்ளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம்" என்று கூறினார்.

பயோஃபோர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே Akums Drugs and Pharmaceuticals நிறுவனத்துடன் மருந்தை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அடுத்த 4 மாதங்களில் உள்நாட்டு சந்தையில் இந்த மருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னாபிடியோல் என்பது கடந்த 1940ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) உடன் கஞ்சா செடிகளில் அடையாளம் காணப்பட்ட 113 கன்னாபினாய்டுகளில் ஒன்றாகும். கஞ்சா சாடிவா தாவரத்தில் (Cannabis Sativa plant) இருந்து உருவாகும் கன்னாபிடியோல் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. கன்னாபிடியோல் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் குடல் ஆரோக்கியம், சருமப் பிரச்சினைகள், நரப்பியல் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை குணப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: Summer Health Tips: கோடை வெப்பத்தில் இருந்து கண்களை காப்பது எப்படி? மருத்துவ நிபுணர் கூறும் டிப்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details