டெல்லி: கடந்த 2002ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, தனது குடும்பத்தினரையும் கொலை செய்த 11 பேர் மீது தொடர்ந்த வழக்கில், கடந்த 2008ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டது. அதன் பின்னர், ஆயுள் தண்டனையில் இருந்த 11 பேரையும், குஜராத் நீதிமன்றம் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்து உத்தரவிட்டது.
அதனைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரிக்க, தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவின் பேரில் தனிக்குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 8ஆம் தேதி, நாட்டையே உறையச் செய்த பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதில், பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் நன்னடத்தை எனக் கூறி முன்விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவு, ஒரு சார்புத் தன்மை உடையது என்று கூறி, குற்றம் சாட்டபட்ட அனைவரையும் இரண்டு வாரங்களில் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மாநில முதலமைச்சர்கள் என பலர் வரவேற்பு தெரிவித்தனர்.