காத்மண்டு:நேபாள சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல பிரஞ்சு சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், விடுதலை செய்யப்பட்டார். உடல் நலப் பிரச்சினகள் உள்ளிட்ட சோப்ராஜின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த நேபாள நீதிமன்றம் அண்மையில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. தனது தண்டனைக் காலத்தில் ஏறத்தாழ 95 சதவீதத்தை சோப்ராஜ் சிறையில் கழித்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
யார் இந்த சோப்ராஜ்..
பிரஞ்சு குடிமகனான சார்லஸ் சோப்ராஜ், இந்திய தந்தைக்கும், வியாட்நாம் தாய்க்கும் பிறந்தவர். அந்த காலத்திலேயே சோப்ராஜின் பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டு கெதர் கலாசாரத்தில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தந்தையுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் அவரை விட்டு பிரிந்து பிரெஞ்சு நாட்டவர் ஒருவரை சோப்ராஜின் தாய் திருமணம் செய்து கொண்டார்.
தந்தை ஏற்றுக் கொள்ளாததாலும், தாயின் புதுக் கணவரிடம் சேரமுடியாமலும் சோப்ராஜ் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காமல், வாழ்க்கை பொருளாதாரத்தை சரிகட்ட சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சோப்ராஜ், தனது 19 வயதில் முதல் முறையாக பிரான்ஸ் நாட்டில் சிறை சென்றார்.
கொள்ளைகளுக்கு நடுவே இதயத் திருடனாக மாறிய சம்பவம்...
சிறு குற்றங்களில் ஈடுபட்டு சிறை செல்பவர்களையும் கூட பெருங்குற்றங்கள் செய்ய கற்றுக் கொடுக்கும் பாடசாலையாக சிறைச்சாலை விளங்குவதாக கூறப்படுவது சார்லஸ் சோப்ராஜ் வாழ்விலும் மெய்யானது.
சிறையில் இருந்து வெளிவந்த சார்லஸ் சோப்ராஜ், சிறைச் சாலையில் கிடைத்த நண்பருடன் சேர்ந்து திருட்டுத் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சாண்டல் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சார்லஸ் பெரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.
கர்ப்பிணி மனைவியுடன் இந்தியாவில் தஞ்சம்...
பிரான்சில் போலீசாரின் துரத்தலுக்கு பயந்து கர்ப்பிணி மனைவி சாண்டலுடன் மும்பைக்கு சார்லஸ் சோப்ராஜ் குடிபெயர்ந்தார். அவருக்கு உறுதுணையாக மனைவியும் கைகோர்க்க, இருவரும் கார் திருட்டு, வெளிநாட்டு பயணிகளிடம் பணப் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னாட்களில் திருந்திய சாண்டல், மகள் உஷாவுடன் மீண்டும் பிரான்சுக்கு குடிபெயர்ந்தார். இதனிடையெ பிரஞ்சு மற்றும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு விஷ ஊசி செலுத்திக் கொன்றதாக கைது செய்யப்பட்ட சோப்ராஜ், 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திகார் சிறையில் அடைக்கபட்ட சார்லஸ் சோப்ராஜ்...
திகார் சிறையில் சோப்ராஜ் அடைக்கப்பட்டார். எந்த சிறையாக இருந்தாலும் காவலர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிச் செல்வதில் சார்லஸ் சோப்ராஜ் வல்லவர் எனக் கூறப்படுகிறது. தான் அடைக்கப்பட்ட சிறைகளில் எல்லாம் உடல் நலக் கோளாறு ஏற்பட்டதாக நடித்த சார்லஸ் சோப்ராஜ், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்தியாவில் இருந்து தப்பி தாய்லாந்து சென்ற அவர் அங்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அங்கிருந்து தப்பி மீண்டும் இந்தியா வந்த நிலையில், கோவா கடற்கரையில் சுற்றித் திரிந்த அவரை இந்திய போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.
தன் கதையை விற்று 100 கோடி வருமானம்...
இந்தியாவில் 21 ஆண்டுகளை சிறையில் கழித்த சோப்ராஜ் 1997 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பிரான்ஸ் திரும்பிய சார்லஸ் அங்குள்ள சொகுசு மாளிகையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், தனது சொந்த கதையை ஹாலிவுட் இயக்குனர்களுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் விற்று லாபம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு பெண்களை கொலை செய்த வழக்கில் நேபாள போலீசார் சார்லஸ் சோப்ராஜை தேடி வந்தனர். கடந்த 2003ஆம் ஆண்டு நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள சூதாட்ட விடுதியில் சார்லஸ் சோப்ராஜ் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சுற்றிவளைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.
வழக்கறிஞர் மகளுடன் காதல் திருமணம்...
நேபாள உச்சநீதிமன்றம் சார்லஸ் சோப்ராஜ்க்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சிறையில் இருந்த சார்லஸ் சோப்ராஜ்க்கு, ஆதரவாக வழக்கறிஞர் சகுந்தலா தாபா என்பவர் வாதாடி வந்தார். பின்னாட்களில் தனக்கு ஆதரவாக வாதாடிய சகுந்தலா தாபாவின் மகள் நிகிதா பிஸ்வாசை, சார்லஸ் சோப்ராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் ஏறத்தாழ 44 ஆண்டுகள் வித்தியாசம் இருந்த போதும் சகுந்தலாவின் அனுமதியில் திருமணம் எளிதாக காத்மண்டு சிறையில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நிலை பிரச்சினைகளை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சார்லஸ் சோப்ராஜ், நேபாள உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனைவி நிகிதாவுடன் சார்லஸ் சோப்ராஜ் 15 நாட்களில் நாடு கடத்த உத்தரவு
தண்டனைக் காலத்தில் 95 சதவீதத்தை சார்லஸ் சோப்ராஜ் கழித்தது, நன்னடத்தை உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு நேபாளம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த புதன்கிழமை காத்மண்டு சிறையில் இருந்து சார்லஸ் சோப்ரான் விடுதலையான நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தன் வாழ்நாட்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த சார்லஸ் சோப்ராஜ் 20-க்கும் மேற்பட்டோரை பணத்திற்காக கொன்று குவித்ததாகவும், அதில் பாதிபேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் சோப்ராஜின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வழங்கவும், அடுத்த 15 நாட்களுக்குள் அவரை நாடு கடத்தவும் நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு சார்லஸ் சோப்ராஜை நாடு கடத்தும் பணியில் நேபாளம் குடிவரவு மற்றும் குடியகல்வு வாரியம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சார்லஸ் சோப்ராஜ் - வாழ்க்கை கதை படம் சோப்ராஜ் கம்பேக்...
2015 ஆம் ஆண்டு 'மெயின் ஆவுர் சார்லஸ்' என்ற தலைப்பில் சார்லஸ் சோப்ராஜின் கதை இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா, சார்லஸ் சோப்ராஜ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மேலும் 'நாகத்தின் நிழல்' என்று டிவித் தொடராகவும் 'பாம்பு', 'சார்லசின் வாழ்வும் குற்றங்களும்' என்ற நூல்களும் சார்லஸ் சோப்ராஜின் வரலாற்றை தாங்கி வெளிவந்தன. சார்லஸ் சோப்ராஜின் வாழ்க்கை வரலாறு பிரபல ஆங்கில் ஊடகமான பிபிசியில், 8 பாகங்களாக வெளியாகின. கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்திலும் சார்லஸ் சோப்ராஜின் கதை சீரிஸாக வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறையின் முதல்சேவை: சென்னைக்கு சென்ற 300 கிலோ ஏலக்காய்!