சீதாமர்ஹி: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நுபுர் சார்மா, பாஜகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக உதய்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பீகார் மாநிலம் சீதாமர்ஹியில், செல்ஃபோனில் நுபுர் சர்மாவின் சமூக வலைதள பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த அங்கித் ஜா என்ற இளைஞரை சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அங்கித் ஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அங்கித் ஜா கூறுகையில், "நான் சாலையோரம் நின்று செல்ஃபோனில் நுபுர் சர்மாவின் சமூக வலைதளத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த சிலர், என்னை நுபுர் சர்மாவின் ஆதரவாளரா? என்று கேட்டனர். அப்போது, நான் ஒரு இந்து, அதனால் நான் நுபுர் சர்மாவை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் என்னை தாக்க ஆரம்பித்தனர். அப்போது ஒருவர் என்னை கத்தியால் தாக்கினார். இதைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து இழுத்துச் சென்றனர்" என்று கூறினார்.
அங்கித் ஜாவை தாக்கியவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு வழக்க வேண்டும் என அங்கித் ஜாவின் தந்தை கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:உதய்பூர் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது - ராஜஸ்தான் உள்துறை அமைச்சர்