தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.11,000 தவணை செலுத்த ரத்த தானம் செய்ய வந்த பெண்ணால் பரபரப்பு - sell blood to pay loan installment

பிகார் மாநிலம் சமாஸ்திபூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் செலுத்த வேண்டிய தவணைத் தொகைக்காக ரத்த தானம் செய்ய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.11,000 தவணை செலுத்த ரத்த தானம் செய்ய வந்த பெண்ணால் பரபரப்பு
ரூ.11,000 தவணை செலுத்த ரத்த தானம் செய்ய வந்த பெண்ணால் பரபரப்பு

By

Published : Jul 1, 2023, 10:24 AM IST

சமாஸ்திபூர்: பிகார் மாநிலம் சமாஸ்திபூர் மாவட்டம் வாரிஸ் நகரைச் சேர்ந்தவர், குல்னாஸ் தேவி. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, தனது விவசாய நிலத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.

ஆனால், அவருக்கு அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், அவர் தற்போது 11 ஆயிரம் ரூபாயை தவணைத் தொகையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர் பல்வேறு இடங்களில் பணம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்து உள்ளார். இருப்பினும், அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை.

எனவே, தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் சமாஸ்திபூரில் உள்ள சதார் மருத்துவமனைக்குச் சென்று உள்ளார். பின்னர், தான் ரத்த தானம் செய்ய விரும்புவதாக மருத்துவமனை ஊழியர்களிடம் குல்னாஸ் தெரிவித்து உள்ளார். அதற்கு எதற்காக ரத்த தானம் செய்ய உள்ளீர்கள் என மருத்துவமனை ஊழியர்கள் கேட்டு உள்ளனர்.

அதற்கு, “நான் விவசாய உபகரணங்கள் வாங்குவதற்காக குழு கடன் எடுத்தேன். ஆனால், விவசாயத்தில் போதிய லாபத்தை என்னால் எடுக்க முடியவில்லை. இருப்பினும், இன்று நான் 11 ஆயிரம் ரூபாய் தவணைத் தொகை செலுத்த வேண்டும். நான் அந்த பணத்தை தயார் செய்வதற்காகவே இங்கு வந்து உள்ளேன்” என குல்னாஸ் பதில் அளித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக வாரிஸ் நகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் குமார் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்பம், அரசிடம் முறையாக விண்ணப்பித்தால், அது குறித்து விசாரிக்கலாம்.

மேலும், அப்பெண்ணுக்கு அரசு தரப்பில் உதவியும் செய்து கொடுக்க முடியும். நாங்கள் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு வந்து உள்ளோம். அதேநேரம், அப்பெண்ணின் குடும்பத்தார் அரசை அணுக வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார். முன்னதாக, குல்னாஸ் தேவி தான் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்து உள்ளார்.

அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் உதவ முன் வரவில்லை என குல்னாஸ் வேதனை உடன் தெரிவித்து உள்ளார். அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அல்லது அரசு அதிகாரிகளை குல்னாஸ் சந்திக்கவில்லை என அவரது தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:ரூ.28 ஆயிரத்தை உடனே கட்ட வேண்டும்... - நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் ஒருவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details