பாட்னா (பிகார்): பிகார் மாநிலத்தின் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கும் விழாவில் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்ள மாட்டார் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், “மாநில அரசுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாற்றம் தேவை. மாநிலத்தில் வேலையில்லை, விவசாயிகள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் பொய்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகின்றனர். நாங்கள் மக்களின் பிரதிநிகள். அவர்களுடன் நிற்போம். நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்துள்ளார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்.
இருப்பினும் அவரின் கட்சியே 75 தொகுதிகளில் வெற்றிப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. அவரின் தலைமையிலான மகா கூட்டணியில் காங்கிரசுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.