பகாஹா: பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகாஹா சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆட்கொல்லி புலி ஒன்று சுற்றித் திரிகிறது. இது கடந்த 5ஆம் தேதி சிங்கி கிராமத்தில் 12 வயது சிறுமியை தாக்கிக் கொன்றது. கடந்த 6ஆம் தேதி இரவு, ஹர்ஹியா சாரே பகுதியில் 35 வயதான ஒருவரையும் தாக்கி இழுத்துச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பிதியில் உறைந்துள்ளனர். இதனால் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல வனத்துறை உத்தரவிட்டது. 400-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாலுவா கிராமத்தில் ஒரு பெண்மணியையும், அவரது மகனையும் புலி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று(அக்.8) காலையில் வீட்டிற்குள் நுழைந்த புலி தாயையும் மகனையும் கொன்றதாக தெரிகிறது. வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்தபோதும் புலி தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த மக்கள், வனத்துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த ஆட்கொல்லி புலி கடந்த இரண்டு மாதங்களில் ஒன்பது பேரை தாக்கி கொன்றதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லவும் அஞ்சி, வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.