பாட்னா:பீகார் கலால் துறை முதன்மைச்செயலரும் குடிமைப்பணி அதிகாரியுமான கே.கே.பதக், கூட்டத்தில் கலந்து கொண்ட ஜூனியர் அதிகாரிகளை கெட்டவார்த்தைகளில் திட்டி வசைபாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில், 1990ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான பதக், பல இளைய அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் பல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
"சென்னையில் போக்குவரத்து விலக்கில் யாராவது ஹாரன் அடிப்பதை நீங்கள் எப்போதாவது, பார்த்திருக்கிறீர்களா, ஆனால் இங்கே போக்குவரத்து சிக்னலில் நின்றால், மக்கள் ஹாரன் அடிப்பார்கள்," என்று பதக் அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளார். இவ்விவகாரத்தில், பதக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பீகாரில் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பீகார் கலால் துறை அமைச்சர் சுனில் குமாரிடம் கேட்டபோது "நான் வீடியோவைப் பற்றி கேள்விப்பட்டேன். அதுகுறித்து பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பீகார் நிர்வாக சேவை சங்கம் போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளனர். பீகார் நிர்வாக சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் திவாரி, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக பதக்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “அத்தகைய அதிகாரியை பணிநீக்கம் செய்யுமாறு அரசுக்கு நாங்கள் கேரிக்கை வைக்கிறோம். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். அவர் எங்கள் மீது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளார். அந்த வார்த்தைகளை தவறு என்றும் அதை கண்டிக்கிறோம்,'' என்றார்.
பின்னர், 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பதக், பீகார் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் அண்ட் ரூரல் டெவலப்மெண்ட் (BIPARD) டைரக்டர் ஜெனரலாகவும் உள்ளார். நவம்பர் 2021-ல், பீகார் மதுபானச் சட்டங்களின் கடுமையான விதிகளை திறம்பட செயல்படுத்துவதற்காக, துறையின் தலைவராக மத்திய அரசின் பொறுப்புகளில் இருந்து பதக், மீண்டும் மாநிலத்திற்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு!