பீகார்:பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி இரவு நேரத்தில், லாகோ என்ற இடத்தில் இருந்த சோதனைச் சாவடியில் காவல்துறை அதிகாரி ஒருவர் மற்றும் நான்கு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அவ்வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி சட்டவிரோதமாக மிரட்டி பணம் வசூலிப்பதாக, அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் வர்மா லாகோ சோதனைச் சாவடிக்கு சென்றார். எஸ்பி அரவிந்த் வர்மா மாறுவேடம் போட்டுக் கொண்டு, ஒரு லாரியில் ஏறி சோதனைச் சாவடிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது, சோதனைச் சாவடியில் அந்த லாரியை தடுத்து நிறுத்திய காவலர், லாரியின் கிளீனரிடம் இரண்டு ரூபாய் லஞ்சம் வாங்கினார். இதனைப் பார்த்த காவல் கண்காணிப்பாளர் லஞ்சம் வாங்கிய காவலரை கையும் களவுமாக பிடித்தார். காவலரிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட ஏராளமான ரூபாய் நோட்டுகளையும் எஸ்பி வர்மா பறிமுதல் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குறிப்பிட்ட சோதனைச் சாவடியில் பணியில் இருந்த ஐந்து போலீசார் மீதும் லஞ்சம் வாங்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக பெகுசாராய் மாவட்டத்தின் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பிறகு, இறுதியாக பாகல்பூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.