பீகார் மாநிலம் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ‘மேன் ஈட்டர்’ புலி ஒன்று பல மனிதர்களை கொன்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் (அக்-5) வனப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள 12 வயது சிறுமியை அப்புலி கொன்றது. இதனையடுத்து புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
பீகார்மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள சிங்கி கிராமத்தில் 12 வயது சிறுமி அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, புலி தூக்கிச் சென்றது. இதைக் கண்ட கிராமத்தினர் துரத்திச் சென்று கூச்சலிடவும் புலி குழந்தையை விட்டு விட்டு ஓடியது. இருப்பினும் புலி தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார்.
இறந்த சிறுமி அக்கிராமத்தைச் சேர்ந்த ரமாகாந்த் மஞ்சி என்பவரின் மகள் பாக்டி ஆவார். இது குறித்து ரமாகாந்த் கூறுகையில், "நள்ளிரவு 12 மணியளவில் புலி எனது மகளை தூக்கிச் சென்றது. பின்னர் நாங்கள் கூச்சல் எழுப்பினோம். ஆனால் அதற்குள் என் மகள் இறந்து விட்டாள்" என கூறினார்.
கடந்த ஐந்து மாதங்களில் இதுவரை வால்மீகி புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் 7 பேரை புலி தாக்கியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். ‘மேன் ஈட்டர்’ புலியை பிடிக்க வனத்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் புலி தொடர்ந்து அதன் இருப்பிடங்களை மாற்றி வருவதால், வனக் காவலர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கேரளாவில் தொடரும் புலியின் அட்டகாசம்; 2 நாட்களில் 10 மாடுகளை அடித்துக்கொன்ற புலி