பீகார்: தேசிய மற்றும் மாநில அளவில் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களைச் செயல்படுத்தச் சாதிவாரி புள்ளி விவரங்கள் தேவை என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்துச் சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவுறுத்தி வருகின்றன. பீகாரில் மாநில அளவிலான சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அனைத்து சாதி, மற்றும் உட்சாதிகள், உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார்.
இதையடுத்து 12 கோடியே 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட பீகாரில் சாதி வாரிக் கணக்கெடுப்பை இன்று (ஜனவரி 7ஆம் தேதி) முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்தார். அடுத்த 45 நாட்களுக்கு இரு கட்டங்களாகப் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள முதல் கட்ட கணக்கெடுப்பில், மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறித்த விவரம் சேகரிக்கப்படும் என்றும், 2ஆம் கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட கணக்கெடுப்பின் போது மக்களின் சாதி, துணை சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.