மும்பை :2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளை தேசிய அளவில் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பணியில் பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்குச் சென்ற நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தெற்கு மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டிற்குச் சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைப்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சரத் பவார், "ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாட்டின் நிலையைப் பார்க்கும்போது, ஒன்றாக செயல்பட்டால், மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும் எனத் தெரிகிறது'' என்று கூறினார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்றும், தனது கணிப்பின் படி, கர்நாடக மக்கள் பாஜகவை விரட்டி மதச்சார்பற்ற அரசை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் சரத் பவார் கூறினார். முன்னதாக சிவ சேனா உத்தவ் அணியின் தலைவர் உத்தவ் தாக்ரேவை, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சந்தித்தனர். மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்குச் சென்ற நிதிஷ் குமார், அவருடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒடிசா தலைநகர், புவனேஸ்வர் சென்ற நிதிஷ் குமார், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.