பீகார்:கங்கை நதியின் குறுக்கே ஆயிரத்து 717 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டும் பணி பீகார் மாநிலம் பாகல்பூரில் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளை இணைக்கும் வகையிலும், கங்கை நதியின் இரு புறங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலும் இந்த பாலம் கட்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த பாலம் ககாரியா, சஹர்சா, மாதேபுரா, சுபால் ஆகிய நான்கு மாவட்டங்களை பாகல்பூருடன் இணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பாலம் கடந்த 2020-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட வேண்டும் என காலநிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் கட்டுமானப் பணிகள் தாமதமானது. அதன் பிறகு கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று நிறைவடையும் சூழலில் இருந்தது. பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 4) மாலை பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலத்தின் இரு முனைகளும் இடிய தொடங்கி பிறகு முழு பாலமும் இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாலம் இடிந்து விழுந்தபோது அப்பகுதி மக்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ வைரலாகப் பரவியது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அதேநேரம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் காவலாளியைக் காணவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமானப் பணியின்போதே இப்பாலத்தின் மூன்று தூண்கள் இடிந்து விழுந்ததாக தெரிகிறது. இரண்டாவது முறையாக நேற்று மொத்த பாலமும் இடிந்துவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் பாஜகவினர் இந்த பாலம் இடிந்து விழுந்ததை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மாநிலத்தில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும், அதிகாரிகள் வெளிப்படையாக கமிஷன் வாங்கிக் கொண்டு இதுபோன்ற தரமற்ற கட்டுமானத்தைக் கட்டியதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டினர். இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பாட்னாவில் இன்று (ஜூன் 5) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், “பாலம் சரியாகக் கட்டப்படவில்லை, அதனால்தான் இரண்டு முறை இடிந்து விழுந்தது. இது முக்கியமான விவகாரம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பாலம் கட்ட ஏன் தாமதமானது? என்பது குறித்தும் விசாரணை நடத்த அறிவுறுத்தியிருக்கிறேன். இந்த விவகாரத்தை துணை முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: Bihar Bridge Collapse :பாலம் இடிந்து கோர விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய மக்கள்?