பாட்னா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மகா கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் புதன்கிழமை (டிச.23) அழைப்பு விடுத்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஈடிவி பாரத்துக்கு இன்று அளித்த பிரத்யேக பேட்டியில், “ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) திரிணாமுல் காங்கிரஸ், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உடன் இணக்கமான உறவை கொண்டுள்ளது.
மகா கூட்டணி
மேற்கு வங்கத்தில் மூன்று கட்சிகளும் இணைவது அவசியம். பிகார் சட்டப்பேரவை தேர்தலை மகா கூட்டணி அமைத்து சந்தித்தோம்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைய வேண்டும். பிகாரில் மக்களின் ஆதரவு மகா கூட்டணிக்கு கிடைத்தது. இருப்பினும் சிலர் மோசடி வழிகளை பின்பற்றி அரசாங்கத்தை அமைத்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு
நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறோம். விவசாய பொருள்கள் சந்தை குழுவை 2006இல் நிதிஷ் குமார் அழித்தார். தற்போது விவசாயிகள் பெரும் அழிவை சந்தித்துவருகின்றனர்.
நாட்டிலேயே குறைவாக வருமானம் பெறுபவர்களாக பிகார் விவசாயிகள் உள்ளனர். இதெற்கெல்லாம் யார் காரணம்? மாநிலத்தில் உணவு உற்பத்தி பெரும் அழிவில் உள்ளது. ஒட்டுமொத்த பிகாரையும் நிதிஷ் குமார் அழித்துவிட்டார்.