ஹைதராபாத்:இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை என அனைவரது வரவேற்பையும் பெற்ற பிக்பாஸ் சீசன் 7 தொடங்குவது குறித்த டீசர் வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.
தமிழில் பிக்பாஸ் பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணம் கமல்ஹாசனின் நேர்த்தியான மற்றும் பக்குவமான பேச்சு தான் என்று சொல்ல வேண்டும்.தவறுகளை எடுத்துரைப்பதிலும், போட்டியாளர்களின் பிளஸ் பாய்ண்டை சுட்டிக் காண்பிப்பதிலும் கமல்ஹாசன் என்றுமே தவறியது இல்லை. குறிப்பாக பிக்பாஸ் தொடர்களில் பங்கேற்கும் பிரபலங்கள் செய்யும் தவறை தொகுத்து அவர் வெளியிடும் ’குறும்படத்திற்கு’ தனிபட்டாளமே உண்டு.
பிக்பாஸ் நிகழ்ச்சி, தொலைக்காட்சியில் மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் இலவசமாகப் பார்க்க முடியும் என்பதால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்று உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் துவங்கப்பட்டது. பிக்பாஸ் முதல் சீசன் துவங்கும் போது, பல்வேறு சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சிக்கு எதிராகக் கிளம்பியபோது, அவை அனைத்தையும் சாமர்த்தியமாகப் பேசி பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிட் செய்தார் உலகநாயகன்.