கவுகாத்தி (அசாம்): அண்டை நாடான பூடானின் குரிஷூ அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், அசாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து நிலைமை மோசமடைந்து வருகிறது. இதனால், அசாம் மாநிலத்தின் பல மாவட்டங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அசாம் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரிஷூ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து பூடான் அரசு அசாம் அரசுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குரிஷு அணையின் நீர்மட்டம், அசாமில் உள்ள பார்பெட்டா, பாங்கைகான் மற்றும் நல்பாரி மாவட்டங்களை பாதிக்கும் அளவுக்கு உள்ளது. முன்னறிவிப்பு இன்றி திறக்கப்படும் பூடானில் இருந்து வரும் குரிஷூ அணை மற்றும் ஓட்ஜெர் நதி நீர் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக மழைக்காலத்தில் இந்த மாவட்டங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூலை 13) தண்ணீர் திறப்பதாக குரிஷூ அணை அதிகாரிகள் அறிவித்தனர். அணையை இயக்கும் ட்ருக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (Druk Green Power Corporation Limited) நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் நீர்த்தேக்கத்தில் உபரிநீர் திறந்து விடப்பட்டு காலை 9 மணிக்கு தண்ணீர் நிறுத்தப்படும் என அறிவித்து இருந்தது.