தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 30, 2022, 10:26 PM IST

ETV Bharat / bharat

பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சாய்ஸ் - சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்கள் பழைய மற்றும் புதிய பென்சன் திட்டத்தில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என தெரிவித்த சத்தீஸ்கர் மாநில அரசு, 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் நேரடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

பென்சன்
பென்சன்

ராய்பூர்:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பென்சன் திட்டத்தை கடந்த 2003ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுத்திவிட்டு புதிய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 2006ஆண்டு முதல் மத்திய அரசின் புதிய பென்சன் திட்டம் பல்வேறு மாநிலங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

பழைய பென்சன் திட்டத்தைக் காட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சலுகைகள் குறைவாக இருப்பதாகக் கூறி மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து விட்டு, அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தின.

இந்நிலையில், பழைய பென்சன் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் அமல்படுத்தக்கோரி ஊழியர்கள் தெரிவித்து வந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தின்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர சாத்தியமில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷான்ராவ் கரத் தெளிவுபடுத்தினார்.

மேலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தும் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மாநிலங்கள் தேசிய பென்சன் திட்டத்தில் சேரும் நிதியைப் பெற முடியாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் பழைய மற்றும் புதியப் பென்சன் திட்டங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குவதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அரசு ஊழியர்கள் பழைய அல்லது புதிய பென்சன் திட்டத்தில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் நேரடியாக பழைய பென்சன் திட்டத்தின்கீழ் வருவார்கள் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அடல் சுரங்கப்பாதையில் வரலாறு காணாத பனிப்பொழிவு - 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details