பரத்பூர்: ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் உள்ள லோஹாருவில் இன்று (பிப். 17) காருடன் எரிந்த நிலையில் 2 உடல்கள் இருந்துள்ளன. இதைக்கண்ட கிராம மக்கள் அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட தகவலில், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர் (25), ஜுனைத் (35) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் 2 பேரும் நேற்று (பிப். 16) அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் பிவானி போலீசார், பரத்பூர் போலீசாருக்கும், இவர்களின் உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பரத்பூர் போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்ய உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.