தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2021, 8:09 AM IST

ETV Bharat / bharat

Bhima Koregaon case: சுதா பரத்வாஜுக்குப் பிணை - 8 பேருக்கு மறுப்பு

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைதான சமூக செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜுக்குப் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அரசியல் செயல்பாட்டாளர்களான வரவர ராவ், ரோனா வில்சன் உள்பட மற்ற எட்டு பேருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

Sudha Bhardwaj granted bail in Koregaon Bhima, பீமா கோரேகான் வழக்கு, சுதா பரத்வாஜ் பிணை, Koregaon Bhima riots case accused, பீமா கோரெகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்
பீமா கோரெகான் வழக்கில் கைதானவர்கள்

மும்பை: 2017 டிசம்பர் 31ஆம் தேதி இரவு மகாராஷ்டிராவின் புனே அருகே பீமா கோரேகான் என்ற பகுதியில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டை முன்னிட்டு இருதரப்பினருக்கு இடையேயான மோதல் பெருங்கலவரமாக வெடித்தது.

இதில், காவல் துறையினர் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர். அந்த மாநாட்டில் வெறுக்கத்தக்க வகையில் பலர் பேசியதாகவும், அந்த மாநாட்டை மாவோயிஸ்ட் தரப்பில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்டது எனவும் காவல் துறையினர் குற்றஞ்சாட்டினர்.

ஸ்டேன் சுவாமி மறைவுக்குப் பின்

இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை (என்ஏஐ) விசாரித்துவருகின்றது. இவ்வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆர்வலரும், பாதிரியாருமான ஸ்டேன் சுவாமி உடல்நலக்குறைவால் முன்னதாக உயிரிழந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்கள்

இவ்விவகாரத்தில் பலர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பல அரசியல் கட்சியினரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர். ஸ்டேன் சுவாமி மறைவைத் தொடர்ந்து, இவ்வழக்கு மீண்டும் வீரியம் எடுத்தது.

புனே நீதிமன்ற விசாரணை செல்லாது

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, என்.ஜே. ஜமந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று (டிசம்பர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்டவரான சுதா பரத்வாஜ் பிணை கோரியிருந்த நிலையில், அவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் யுக் சௌத்ரி நேற்று முன்னிலையானார்.

நீதிமன்றத்திடம் சுதா தரப்பு, "2018-19ஆம் ஆண்டுகளில் சுதாவிற்கு எதிராக உபா [UAPA - சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்] சட்டத்தின்கீழ் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிகையின் விசாரணையை புனே அமர்வு நீதிமன்றம் விசாரிப்பது தகுதியற்றது. எனவே, அந்த விசாரணை செல்லாது" எனத் தெரிவித்தனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோள்காட்டி, உபா சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை, என்ஐஏ சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என வாதிட்டார்.

எட்டு பேருக்குப் பிணை மறுப்பு

வழக்கை விசாரித்த நீதிபதி, கே.டி. வாதானே சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்றும், ஆனால், அவர் சிறப்பு நீதிபதியாக உத்தரவைப் பிறப்பித்துள்ளார் எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பெறப்பட்ட பதில்களை சுதா தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

சுதா தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி சுதாவின் பிணை மனு மீதான தீர்ப்பைத் திரும்பப்பெற்று, அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், சுதா பரத்வாஜின் பிணை நிபந்தனைகளைத் தெரிவிப்பதற்கு அவரை வரும் 8ஆம் தேதி என்ஐஏ நீதிமன்றத்தின் முன் முன்னிறுத்த தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், சுதாவுடன் கைதான வரவர ராவ், ரோனா வில்சன், சுதிர் தவாலே, வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், பேராசிரியர் சோமா சென், மகேஷ் ராவத், வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்குப் பிணை வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையும் படிங்க: தனிநபரின் அனுமதியில்லாமல் புகைப்படம் பயன்படுத்தக் கூடாது - ட்விட்டர் புது விதி

ABOUT THE AUTHOR

...view details