டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கு மாற்றுவது தொடர்பான மசோதாவினை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். IPC, CPC மற்றும் இந்திய ஆதார சட்டம் இவைகளை பாரதிய நியாய சங்ஹித், பாரதிய சக்ஷியா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என மாற்றம் செய்ய உள்ளதாக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா இந்திய தண்டனைச் சட்டத்தை (ஐபிசி) மாற்ற முயற்சிக்கும் என்றும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதா அரசியல் நோக்கங்களுக்காக கொடூரமான காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
காலனித்துவ ஆட்சியால் உருவாக்கப்பட்ட மூன்று சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதற்காக தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனையும் தேவைப்படும் பட்சத்தில் அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படும் என இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. மேலும் தேசத் துரோக சட்டத்திலும் மாற்றம் கொண்டு வருவதற்கு மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் குற்றத்திற்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதா குறித்து முன்னாள் சட்டத் துறை அமைச்சர் கபில் சிபில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவரது பதிவில், "பாரதிய நியாய சன்ஹிதா (2023) அரசியல் நோக்கங்களுக்காக போலீசார் கொடூரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கிறது.
15 நாட்களாக உள்ள போலீஸ் காவலை 60 முதல் 90 நாட்கள் வரை உயர்த்துவதற்கு சட்டம் அனுமதிக்கிறது. மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள் மீது வழக்கு தொடர்வதை மறுவரையறை செய்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Criminal laws overhaul: இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றம்: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டு சிறை, கூட்டுக்கொலை குற்றத்திற்கு மரண தண்டனை, தேசத்துரோக சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம்.!