தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Wrestlers Protest : மத்திய அரசுக்கு இறுதி எச்சரிக்கை... விவசாய சங்கங்கள் கெடு! - விவசாய சங்கங்கள் பிரிஜ் பூஷன் சிங்

7 நாட்களுக்குள் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர்.

Wrestlers Protest
Wrestlers Protest

By

Published : Jun 2, 2023, 7:31 PM IST

டெல்லி :மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது 7 நாட்களுக்குள் கைது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூன் 9ஆம் தேதி நாடு தழுவிய விவசாய சங்கங்களின் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 28ஆம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் முன் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை டெல்லி போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால், நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக கூறிய வீரர், வீராங்கனைகள் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாருக்கு சென்றனர்.

அங்கு, ஹர் கி பவுரி பகுதியில் உள்ள கங்கை நதியில் பதக்கங்களை வீச இருந்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாய சங்க பிரதிநிதிகள், 5 நாள் அவகாசம் கேட்டு மத்திய அரசுக்கு கெடு விதித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, மற்றும் உலக மல்யுத்த அமைப்பும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் பக்கம் நின்று உரிய விசாரணை நடத்தக் கோரி மத்திய அரசை அறிவுறுத்தியது.

இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து உள்ளதாகவும், 10 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக மார்பு உள்ளிட்ட பகுதிகளை தொடுதல் போன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரிஜ் பூஷன் சிங் மீது புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பிரிஜ் பூஷன் சிங் மீது புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்ததாக டெல்லி போலீசார் கூறினர். பிரிஜ் பூஷன் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றும் போலீசார் கூறினர்.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். முன்னதாக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய சம்யுக்த கிஷான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள், குடியரசுத் தலைவரை சந்தித்து பாஜக எம்.பி. மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா துணை ஆணையர் மற்றும் துணை பிரிவு நீதிமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்திக்கவில்லை என்றால் தலைநகர் டெல்லியை முற்றுகையிடப் போவதாகவும், நாடு தழுவிய விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து பேசிய பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாயிட், மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்து பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டிம் என்றும், இல்லையெனில், விவசாய சங்கங்கள், மல்யுத்த வீரர்களுடன் ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

மேலும் பாலியல் புகார் விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சிங் மீது 7 நாட்களுக்குள் கைது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை எதிர் கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க :Wrestlers Protest : பிரிஜ் பூஷன் சிங்கிற்கு 3 ஆண்டுகள் சிறை? டெல்லி போலீசார் பதில்!

ABOUT THE AUTHOR

...view details