கடந்த 2020ஆம் ஆண்டு நடந்து முடிந்த பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) தலைமையிலான மகா கூட்டணி மாபெரும் வெற்றிபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அக்கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே வென்றது. இதன் காரணமாக இளம் தலைவராக உருவெடுத்த தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாமல்போனதற்கு காங்கிரசின் மோசமான செயல்பாடுகளே காரணம் என ஆர்.ஜே.டி.யின் மூத்தத் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்தத் தோல்வி கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தோல்விக்குப் பொறுப்பேற்கும் வகையில், பிகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங் கோஹில் தன்னை கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு டெல்லி மேலிடத்திற்கு வேண்டுகோள்விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று (ஜன. 05) பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பிரச்சினை ஓய்வதற்குள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அக்கட்சியை விட்டு வெளியேற உள்ளதாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் பாரத் சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் காங்கிரசின் மூத்தத் தலைவர் பாரத் சிங் தொடர்ந்து பேசிய பாரத் சிங், “19 எம்எல்ஏக்களில் 11 பேர் பிகார் காங்கிரசிலிருந்து வெளியேற உள்ளனர். வெளியேறவுள்ள அவர்கள் 11 பேரும் பாரம்பரிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்ல. தேர்தலில் போட்டியிட பணத்தை வாரி வழங்கி சீட்டைப் பெற்றவர்கள்.
காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, மாநிலங்களவை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சதானந்த் சிங் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்.ஜே.டி. உடனான கூட்டணி கட்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். பிகாரில் கட்சியின் நிலைமை குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
பாரத் சிங்கின் இந்தக் கருத்து தொடர்பாக பேசிய ஜே.டி.யு. கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் ரஞ்சன், “பாரத் சிங்கின் கருத்துகள் பிகார் காங்கிரஸ் ‘கோமா’ நிலையில் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க :சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மேற்பார்வையாளர்களை நியமித்த காங்கிரஸ்!