ஜாகிர் அப்துல் கரீம் நாயக் ஒரு இஸ்லாமிய மதபோதகர். மும்பையைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்திவந்தார். 2016ஆம் அண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேநீர் விடுதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இதில் பிடிக்கப்பட்ட ஒரு பயங்கரவாதி தான் மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் ஈர்க்கப்பட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
இதையடுத்து பேச்சுகள் மூலம் பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், வன்முறையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு முகமை இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இளைஞர்களை திசை திருப்பி தவறான பாதைக்கு அழைத்துச் செல்லுதல் மற்றும் பண மோசடி ஆகிய வழக்குகளிலும் இவர் சிக்கியுள்ளார்.
இந்திய அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்திவந்த ஜாகிர் நாயக்கை மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த நிலையில், அவர் மலேசியாவில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து அந்த நாட்டிலேயே அடைக்கலமானார்.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மதபோதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு கடந்தாண்டு இந்திய அரசு மலேசியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போதுவரை இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை.
- நுழைவுஇசைவு (விசா) மறுப்பு
ஜாகிர் நாயக்கின் மீதான இந்தியாவின் குற்றச்சாட்டையடுத்து மலேசியாவிலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல அவருக்கு நுழைவுஇசைவு மறுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அவருக்கு நுழைவுஇசைவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடி - மலேசிய பிரதமர் மகதீர் முகமது சந்திப்பு
சமீபத்தில் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் மலேசிய பிரதமர் மகதீர் முகமதுவும் சந்தித்துப் பேசினர்.
- ஜாகிர் நாயக் விவகாரம் பற்றி மலேசிய பிரதமரின் கருத்து
மலேசிய பிரதமர் மகதீர் முகமது சமீபத்தில் அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு தொந்தரவாகவே இருக்கிறார் என்றார்.
சமீபத்தில் கூட மலேசிய இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஜாகிர் நாயக் கருத்து தெரிவித்திருந்தார் என்றும் நாங்களும் இவரை எங்கேயாவது அனுப்பப் பார்க்கிறோம்; ஆனால் அவரை எந்தவொரு நாடும் ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று கூறியுள்ளார். அவர் தங்களது நாட்டு குடிமகன் அல்ல, அவரை தங்களது நாட்டில் வாழ இதற்கு முந்தைய அரசு அனுமதி அளித்திருந்தது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவந்ததை அடுத்து அவருக்குப் பொதுமேடைகளில் பேசத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி - மலேசிய பிரதமர் மகதீர் முகமது சந்திப்பு - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வாதம்
ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரத்தில் இந்தியா விடாப்பிடியாக இருக்கிறது என்றும் இது தொடர்பாக ரஷ்ய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார் எனவும் கூறியிருக்கிறார். ஜாகிர் நாயக்கை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டவர தொடர்ந்து பணியாற்றுகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இதனை மோடி தலைமையிலான அரசு தனது முதல் 100 நாட்களில் இதற்கான பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாகிவரும் நிலையில், ஜாகிர் நாயக்கால் இந்திய-மலேசிய உறவுகளில் விரிசல் ஏற்படும் என்றே தெரிகிறது. முன்னுக்குபின் முரணாக யார் பேசுவது என்ற சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில் இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தால் மட்டுமே இருநாடுகளுக்குமிடையே சுமுகமான உறவு நிலைக்கும்.