கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரு மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிமாநிலங்களிலிருந்து அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில் வரும் ஓட்டுநர்கள், கிளினர்கள் ஆகியோரும் பரிசோதனைக்குப் பின்னரே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் அடைக்கப்பட்டு, சாலைகள் மூடப்பட்டன. சோதனைச் சாவடிகளில் இரு மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறையினரும் காவல் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சீக்கலபைலு சோதனைச் சாவடியில் பயண அனுமதி சீட்டு இல்லாமல் ஐந்து வாகனங்களில் 35 பேர் மாநில எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் வந்த வாகனங்களை மடக்கினர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) புர்ரா மதுசூதன் யாதவ் தனது குடும்பத்தினருடனும் ஆதரவாளர்களுடனும் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லவிருந்தது தெரியவந்தது.
காவல் துறையினர் அவர்களை கர்நாடாகாவுக்கு திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதனை கேட்க மறுத்து புர்ரா மதுசூதன் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் பாஸ் வழங்மி ஆந்திர மாநிலத்துக்குள் அனுமதித்துள்ளனர். மற்றவர்களை பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க:'உடம்பைக் குறைக்க நடைபயணத்தை விட யோகா நல்லது' - காவல் துறையினரின் நூதன தண்டனை