மூன்று தலைநகர் விவகாரம் ஆந்திர மாநிலத்தையே பரபரப்பில் வைத்துள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் முந்தைய தலைநகரமான ஹைதராபாத் புதிய மாநிலம் தெலங்கானாவுக்கானதாக மாற்றப்பட்டது. ஆந்திராவுக்கு அமராவதி புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டது. ஆந்திராவின் முகமாகப் பார்க்கப்பட்ட ஹைதராபாத் தெலங்கானா தலைநகராக மாற்றப்பட்டது ஆந்திர மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உவப்பில்லை.
இருந்தபோதிலும், அமராவதியை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கில், அதனை மேம்படுத்த பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது முந்தைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு. அதற்காக விவசாயிகளிடம் நிலமும் அரசு தரப்பில் வாங்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சரானார்.
முதலமைச்சாரான நொடியிலிருந்து அதிரடி நடவடிக்கைகளைக் கையாண்ட ஜெகன், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். நிர்வாகம், அரசியல், நீதி ஆகிய மூன்று பிரிவுகளில் ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்குவது என்பதே அது.
அதன்படி, அமராவதியிலிருந்து நிர்வாகத் துறையை விசாகப்பட்டினத்துக்கு மாற்றி, அதை புதிய தலைநகராகவும், நீதித் துறையைப் பிரித்து கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்றுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாக ஜெகன் அறிவித்தார். மேலும், அமாரவதியை சட்டப்பேரவை தலைநகராகச் செயல்படும் என்றும் அதில் கூறினார்.
இந்த முடிவை அவர் சாதாரணமாக அறிவிக்கவில்லை. முதலில் ஜி.என். ராவ் கமிட்டி கள ஆய்வுகளை அறிந்து அறிக்கை தாக்கல் செய்தது. பின்னர் சர்வதேச ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங்கும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த இரு அறிக்கைகளையும் ஆய்வுசெய்ய உயர்மட்டக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையின்படிதான் இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ஆந்திராவிலும் சலசலப்பை உண்டாக்கியது.
அக்குழுவின் பரிந்துரையின்பேரில் மூன்று தலைநகர்களை அமைக்க ஜெகன்மோகன் முழுவீச்சோடு செயல்பட்டுவருகிறார்.
மறுபுறம் இதனை எதிர்த்து விவசாயிகளும், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளும் போராடிவருகின்றன. ஜன. 20ஆம் தேதி மூன்று தலைநகரங்களை உருவாக்கும் மசோதாக்களை நிதி அமைச்சர் பி. ராஜேந்திரநாத் தாக்கல் செய்தார்.