புதுச்சேரி உருளையான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனத் திருட்டு நடைபெறுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் திருவள்ளுவர்-காமராஜர் சாலை சந்திப்பு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் காவல் துறையினரைக் கண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அவரை விரட்டிப் பிடித்த காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பதும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நெல்லிதோப்பு மீன் மார்க்கெட் அருகிலிருந்து திருடி வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் உருளையன்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பெரியகடை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய வாகனங்களை திருவண்ணாமலையில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருக்கும் அவரது நண்பரான நூர்முகமது என்பவரிடம் கொடுத்து, இருசக்கர வாகனங்களை விற்று இருவரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் இதையடுத்து வாகன திருட்டில் ஈடுபட்ட நூர்முகமது, பழனி ஆகியோரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஆறு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விடுதிக்குள் நுழைந்து இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய கும்பல்