உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு இடையேயான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதித்ததை தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அரசின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை (ஏப்.30), பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கான செயல் திட்டத்தை வகுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல் திரும்ப அழைத்து வரப்படும் ஆறு லட்சம் தொழிலாளர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடமும் சமூக சமையலறைகளையும் ஏற்பாடு செய்யுமாறு அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி முழு ஊரடங்கின் காரணமாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான செயல் திட்டத்தை வகுக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை உத்தரப்பிரதேச அரசு மற்ற மாநில அரசுகளிடம் கேட்கும்.
மற்ற மாநிலங்களில் குடியேறிய தொழிலாளர்களின் பெயர், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளையும் அரசு கோரியுள்ளது” என்றார்.