இந்தியாவின் பல மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிற கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தொற்றின் சமூகப் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடவும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், சாலையோர கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கரோனா வைரஸின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தொழில்துறை மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தொழில்துறைக்கு உதவும் வகையில் உத்தரப்பிரதேச அரசு, சில தொழில்துறை பிரிவுகளுக்கு தொழில் நடவடிக்கைகளை மறுபடியும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.
மேலும், மூன்று மாதங்களுக்கு மாநிலத்தின் தொழில்துறை, வணிக நிறுவனங்களின் நிலுவைத் தொகை மீதான வட்டியை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளது. இதனை அம்மாநில தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் சதீஷ் மகானா உறுதிப்படுத்தியுள்ளார்.