உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அம்மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கவலைப்படும் அளவிற்கு இல்லை என்பதை உணர்த்தும் வகையில், யோகி ஆதித்யநாத் அரசு தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகள் அடிப்படையில் உபியின் குற்ற விகிதம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "2018ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின் அடிப்படையில் பார்த்தோமேயானால், நாட்டின் 17 விழுக்காடு மக்கள் தொகையை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் குற்ற விகிதம் வெறும் 10 சதவீதமே.
கொலை, பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
கொலை விகிதம் தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 2.2ஆக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கொலை விகிதம் 1.8 மட்டுமே. பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் விகிதம் தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 58.8ஆக உள்ளது. அதுவே, உத்தரப் பிரதேசத்தில் இது 55.7 ஆக உள்ளது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், அஸ்ஸாம் மாநிலங்களைக் காட்டிலும் இது மிகவும் குறைவு.
அதேபோன்று, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் ஒரு லட்சத்துக்கு 22.5ஆக உள்ளது. தேசிய சராசரியோ 31.8ஆக உள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசு பல்வேறு உதவிகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. மாநில சிறப்புக் காவல் படையினருக்கு ஆயுதம், வாகனம் வாங்கக் கூடுதலாக ஆறு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க : கான்பூர் என்கவுண்டர் வழக்கு : விகாஸ் துபே கூட்டாளிகளின் புகைப்படங்கள் வெளியீடு