பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடந்த 14ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். டெல்லி சப்தார்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் கடந்த செப்.29ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் அந்தப் பெண்ணின் உடலை ஹாத்ராஸில் பெற்றோருக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக எரித்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பல இடங்களில் போராட்டங்களாக வெடித்துள்ளது.
இந்நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், சிறுமிகள் மற்றும் பட்டியலின பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்குகளில் மாநில காவல்துறை திறமையாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.