உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருவரது பேச்சுகளும் அமைந்ததால் யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி, யோகி ஆதித்யநாத் இன்று காலை 6 மணி முதல் 72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பரப்புரை செய்யத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க பரப்புரைக்கு முட்டுக்கட்டை போட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்கு இன்று காலை சென்றார்.
கோயிலுக்குள் சென்று இரு கரம் கூப்பி வழிபட்ட யோகி ஆதித்யநாத்தை சுற்றி பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இதையடுத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்காமல் யோகி ஆதித்யநாத் அங்கிருந்து நழுவிச் சென்றார்.
இதனிடையே லக்னோ தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த ராஜ்நாத் சிங், அதே கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற பிறகே அனுமன் கோயிலுக்கு ராஜ்நாத் சிங் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.