வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழையால் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. இதனால், யமுனா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த நதியின் முழு உயரம் 205.33 மீ. இதனிடையே, தொடர்ந்து பெய்துவந்த வெளுத்துவாங்கும் மழையால் யமுனை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தற்போது, அந்த நதியின் முழு உயரமான 205.33 மீட்டரைக் கடந்து அபாயக் கட்டத்தை தாண்டி ஓடுகிறது. முழு உயரத்தையும் தாண்டி 0.61 அதிகரித்து 205.94 மீட்டராக வெள்ளம் கரையைக் கடந்து சீறிப் பாய்கின்றது.
இது குறித்து டெல்லி முதலமைச்ச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், 'வெள்ள பாதிப்பிலிருக்கும் மக்களுக்கு உடனடியாக உதவுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறேன்' என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் தங்குவதற்கு 2,120 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அம்முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடிப்படை உதவிகள் செய்யப்பட்டுவருகின்றன எனவும் தெரிவித்தார்.
அபாய பகுதிகளில் வசிக்கும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விரைவில் வெளியேற்ற அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.