மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் சகாப்தத்தை முடித்துவைத்து ஜெகன்மோகன் ரெட்டி அபார வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் இன்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் பகல் 12.33 மணிக்கு ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டி கையொப்பம் விஜயவாடாவில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் பின்னர், பாதிரியார்கள் அவருக்கு ஜெபம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். கட்சி ஆரம்பித்த சில வருடங்களில் தெலுங்கு தேச கட்சியை வீழ்த்தி ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
பல்வேறு அரசியல் தலைவர்களும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மேலும், ஆந்திரா, தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் நரசிம்மன் கடந்த ஒன்பது வருடங்களில் ஐந்து முதலமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.