கேரளா மாநிலம் திருச்சூரில் உலக புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், முக்கிய நிகழ்வாக யானை அணிவகுப்பு, வான வேடிக்கை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன. இதனை காண திருச்சூர் சுற்றி வட்டாரத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர். மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்துள்ளனர்.
குறிப்பாக, செண்டை, திமிலா உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை கொண்டு நடைபெறும் பஞ்சவாத்தியம் இசை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த அற்புதமான நிகழ்வு உலகின் மிகவும் புகழ்பெற்றதாகவே கருதப்படுகிறது.
முன்னதாக நேற்று, திருச்சூரின் வடக்குநாதர் கோயிலின் மேற்கு நடை வழியாக 54 வயதுயுடைய " ராமச்சந்திரன்" என்ற யானை வெளியே வந்து, மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி பூரம் திருவிழா தொடங்குவதாக அறிவித்தது. இதனை ஏராளமானோர் ஆரவாரத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.
வடக்குநாதர் கோயிலின் மேற்கு நடை வழியாக ராமச்சந்திரன் யானை வெளியே வந்தபோது கடந்த பிப்ரவரி மாதம், மதம் பிடித்ததால் இரண்டு பேரை இந்த யானை கொன்றது. இதன் காரணமாக கேரளா அரசு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் பங்கேற்க தடை விதித்தது. இதனையடுத்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், மருத்துவ குழுவின் ஒப்புதலுக்கு பிறகு இந்த ஆண்டு ராமச்சந்திரன் யானை பங்கேற்றுள்ளது. பல ஆண்டுகளாக யானை அணிவகுப்பிற்கு "ராமச்சந்திரன்" யானை தலைமை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.