உலகத் தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதிகள் வரை கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலின் அவசியத்தை விளக்கவே இந்த வாரத்தில் இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போன்றவற்றை நடைபெற்றுவருகிறுது.
ஒரு தாய் பெற்ற குழந்தைக்கு கொடுக்கும் முதல் சீதனம் தாய்ப்பால் (சீம்பால்). இது குழந்தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்று மருத்துவ உலகம் கூறுகின்றது.
தாய்ப்பாலில் புரத சத்தும் நோய் எதிர்ப்பு சத்துகளும் உள்ளன. வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதாலும், எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும் தாய்ப்பால் உள்ளது. எனவே தாய்ப்பாலை ஒருதுளி கூட வீணாகாமல் குழந்தைகளுக்கு தாய்மார்கள் தரவேண்டும். மேலும் பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு, வாய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் சுகாதாரத் துறை சார்பில் துணை இயக்குநர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இப்பேரணி சுகாதாரத் துறை தலைமை அலுவலகம் அருகே தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. அப்போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். மேலும் பேரணியில் சுகாதாரத் துறை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
உலகத் தாய்ப்பால் வாரம் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!