தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2020, 9:00 AM IST

ETV Bharat / bharat

உலக உயிரிப்பன்மைய நாள் - இயற்கையிடம் நமக்கான தீர்வுகள்

உலக உயிரிப்பண்மை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இயற்கையின் முக்கியத்துவம் குறித்து இந்திய தேசிய விதைக் கழகத்தின் இயக்குனர் இந்திரா சேகர் சிங் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

உலக உயிரிப்பன்மைய நாள்
உலக உயிரிப்பன்மைய நாள்

பன்னாட்டு உயிரியப் பன்மைய நாளைக் கொண்டாடும் வேளையில், நாமே இயற்கை; அதனிலிருந்து பிரிந்து விலகியவர்கள் அல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டியுள்ளது. இந்த மண்ணில் பிறந்த முன்னோரான தீர்க்கதரிசிகள், இந்த உறவை வாசுதேவ குடும்பகம் எனும் பாரிய உலகளாவிய குடும்பம் என்று குறிப்பிட்டனர். மெல்லிய மண்புழு முதல் பெரும்பலம் கொண்ட யானைவரை இந்தக் குடும்பத்தின் உயிரினங்கள் பரஸ்பரம் உதவியாக இருந்து வாழ்க்கையை ஓட்டுகின்றன. பஞ்சம், மழைவெள்ளம் போன்ற காலங்களில் இந்தப் புவிக் கோளத்தைப் பற்றிய உள்ளுணர்வோடு, பல படிப்பினைகளைக் கற்றுக் கொள்கிறோம்; எல்லா உயிர்களுக்கும் இடையிலான சார்புத் தன்மையின் பொருட்டு பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

நம்முடைய முன்னோர் அனைவரும் நூற்றாண்டு கணக்கில் கடுமையாக உழைத்துள்ளனர். அதனால்தான் மாறுபட்ட, காலநிலைக்கு ஏற்ப நெகிழ்வுறக் கூடிய சத்தான விதைகள் நமக்குக் கிடைத்துள்ளன. அதன் விளைவாகவே இந்தியர்கள் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் உணவுகளின் பன்மையத்தைப் பெற்றுள்ளனர். நம் நாட்டில் மட்டும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி வகைகள் உள்ளன.

நமக்கு ஆரோக்கியம் வேண்டும் என்பதற்காக, தெய்வீகமான சடங்குகளில் பார்லி முதல் கேழ்வரகுவரை பயிர் விதைகளுக்கு மதிப்பை அளித்து வருகிறோம். நவராத்திரியின்போது ஒன்பது தெய்வங்களை வேண்டிக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு தூய விதையை காணிக்கை தருகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரை நமது சடங்குகளில் உயிரிப் பன்மையம் பாதுகாக்கப்படுகிறது. இன்னும் இந்தியாவின் பல சமூகங்களில், மணமகள் தன் மாமியார் வீட்டுக்குச் செல்லும்போது பூர்வீகமான விதைகளையும் மஞ்சள் போன்ற புனிதமான மசாலாப் பொருள்களையும் எடுத்துச் செல்கிறார்கள். உண்மையில், சமற்கிருதத்தில் கரும்புக்கு 'இக்சு' என்பார்கள்; புராண மன்னர் இராமனின் மரபுக்குப் பெயர் இக்சுவாகு. இது எவ்வளவு தற்செயலான வேடிக்கை பாருங்கள்!

விலங்கினங்கள் முற்றிலுமாகப் போய்விடவில்லை; நாம் அவற்றை துணையாக இருப்பதாகவும் தெய்வங்களின் வடிவங்களாகவும் ஆக்கி புனிதப்படுத்தி இருக்கிறோம். மேற்கு நாடுகளால் மிகவும் வெறுக்கப்பட்ட கொள்ளை நோய்க் காரணியான எலிகூட, புனிதமானதாக விநாயகனுடன் தொடர்பு உடையதாக உள்ளது. இந்தத் துணைக் கண்டத்தின் நாகரிகமானது, மானுடவியல் மையமான குறுகலான பார்வைக்கு அப்பாற்பட்டது. இங்குள்ள ஒவ்வொன்றையும் புனிதமானவையாகக் கருதிவருகிறோம். ஏனென்றால் அவை ஒவ்வொன்றும் பெரும் வாழ்க்கைச் சுழற்சிக்கு தம் பங்கை அளிக்கின்றன.

ஆனால் கெடுவாய்ப்பாக கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கோ இவை, சடங்குகள் அல்லது மூடநம்பிக்கைகள் என்பவையாகத் தெரிந்தன. அவர்களுக்கு இது புரியாததால் குழம்பிப் போய் நம்முடைய புனிதமான விதைகளான பட்டாணி, தட்டைப் பயறு, கொள்ளு ஆகியவற்றை அவதூறுசெய்வதைப் போல வேறு பெயரிட முனைந்தனர்.

தங்கத்துக்கான வேட்கையுடன் பீரங்கிப் படகுகளைக் கொண்ட காலனி ஆதிக்க சக்திகள், கங்காணிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கினர். அவர்கள் நமது பண்டைய வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்க மெனக்கெட்டனர். இயற்கையைத் தோற்கடிப்பது எனும் புதிய வைரசால் அவர்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தினர். ஏதன்ஸ் சாம்ராச்சியம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததுடன் தொடங்கியது, ஏகாதிபத்திய கட்டம். இந்தப் புவியையும் இதிலுள்ள அனைத்து வகை உயிரின வளங்களையும் அழிப்பது எனும் நரகத்துக்குள் போய் அது முடிவதாக உள்ளது.

ஆனால் இயற்கையை வெல்வது முடிந்துவிட்டதா? இல்லை, அது பரிணாமம் அடைந்துள்ளது. பழைய கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக, பெரிய பகாசுர விவசாயத் தொழில் நிறுவனங்கள் புதிதாக முளைத்து உள்ளன.உயிர்மத் திருட்டாலும் கொள்ளையடிப்பதாலும் அவை வண்டியை ஓட்டுகின்றன. ஏராளமான பன்முகத் தன்மையின் மண்ணான இந்தியா, நம் உயிரிப் பன்மையம், நம் விதைகள், நம் மூலிகைத் தாவரங்கள், நம் விலங்குகளின் மரபணு மாறுபாடு ஆகியவற்றுடனான நம்முடைய தொடர்பு - எனும் தன் உண்மையான வளத்தை இழந்துவருகிறது.

ஆனால், இதற்கு தேசிய அளவில் அதிக அபாயங்கள் உள்ளன; உலகில் மிக உயர்ந்த ஒன்றாக உள்ள இந்திய தாவர மரபணு வளங்கள் (பிஜிஆர்) வெளிநாடுகளில் படியாக்கக் கொள்ளைக்கு உள்ளாகின்றன. சில சமயங்களில் செயலாக்கத் துறையின் குறைபாட்டாலும் வேறு நேரத்தில் சட்டவிரோதமாகவும் இது நடக்கிறது. ஐ.டி.பி.ஜி.ஆர்.எஃப்.ஏ. மற்றும் யு.பி.ஓ.வி. போன்ற உடன்படிக்கைகள், கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக நமது தாவர மரபணு வளங்களை தம்மிடம் தந்துவிடுமாறு இந்தியாவை நெருக்க முயற்சி செய்கின்றன.

ஆனால், இந்த தாவரங்களையும் விதைகளையும் உருவாக்கியதில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு குறைந்தபட்ச உழைப்பூதியத்தையும் பலன்களையுமே தருகின்றன. மேலும், இந்த ஒப்பந்தங்கள் நம்முடைய உயிரிப் பன்மையச் சட்டத்தைத் தகர்த்து, தேசிய உயிரிப் பன்மைய அதிகார அமைப்பின் மதிப்பைக் குறைக்கும் முயற்சியாகவும் இருக்கிறது.

சீன நிறுவனங்கள் உள்பட சர்வதேச விதை நிறுவனங்கள், 100% கட்டுப்படுத்தக்கூடிய துணை நிறுவனங்களை இந்தியாவில் கொண்டுள்ளன. இதன் மூலம் மூலத்தந்திரமாக நம்முடைய தாவர மரபணு வளத்தைக் கையாள்வதுடன், தத்தம் நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கின்றன. இதேவேளை, இந்திய நிறுவனங்களோ சீனம், தாய்லாந்து போன்ற நாடுகளில் சொந்தமாகக்கூட நிறுவனங்களை வைத்திருக்க முடியாது.

பருவநிலை தப்புதல் போன்ற சவால்களை எதிர்கொள்ள்வதற்கு, நம்மைத் தயார்ப்படுத்தும் ஒரு புதையலாக இது விளங்குகிறது; எனவே, இதற்கேற்ப கூடுதலாக தேசியவாதத் தன்மை கொண்ட அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். உயிரியப் பன்மையத்தைப் பாதுகாப்பதற்கான அடுத்த கொள்கையானது, புதிய வகைகளை உருவாக்குவதற்கும் வளர்த்தெடுப்பதற்கும் விவசாயிகளின் உரிமைகள் வலுவான பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.

'நமக்கான தீர்வுகள் இயற்கையில் இருக்கின்றன' என்ற கருப்பொருளானது, புதிய சவால்களை எதிர்கொள்ளும்படியாக காட்டு வகைகளையும் உள்ளூர் இனங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆனால் இது நீடித்த நிலைத்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதாவது, இலாபம் ஈட்டுவதை ஊக்குவிக்கக்கூடிய - விலை உயர்வான காப்புரிமை பெறப்பட்ட நுட்பரீதியான மாற்றுகளுக்குப் பதிலாக, உள்ளூர் மக்களையும் விவசாயிகளையும் ஈடுபடுத்துவதாக இருக்கவேண்டும்.

பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், இந்திய உயிரிப்பன்மையமானது எவ்வாறு நம்முடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை பல முறை வலியுறுத்திக் கூறியுள்ளார். மரபணு மாற்றங்களோ அல்லது சி.ஆர்.எஸ்.பி.ஆர் போன்ற மற்ற தலையீடுகளோ நமக்குத் தேவை இல்லை. இயற்கையையும் அதன் ஏராளமான பண்புகளையும் இன்னும் ஆய்வுசெய்தே தீர்வைப் பெறவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயிரிப் பன்மையம் காக்கும் விளைபொருள்களைப் பயன்படுத்தப் பழகவேண்டும். பொருளாதார ரீதியானதாக மட்டும் அல்லாமல் ஆரோக்கியமானதாகவும் இது இருக்கும். அனைவரும் ஒரு வேளை உணவாக ஒரு சிறுதானியம் அல்லது மரபுவகை அரிசி / கோதுமை ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் இதைத் தொடங்கலாம். இது நமது குடலின் உயிரிப் பன்மையத்தைப் பெருக்கும்; நம்முடைய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மரபான உள்ளூர்க் காய்கறிகளையும் நாம் மீட்டுக் கொண்டுவர வேண்டும்.

மேலும், அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் உள்ளூரில் பயிர்விக்கப்படும் குளுமை தரும் காய்கறிகளையும் நாடுவது தேவையாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால், உயிரிப்பன்மைய அடிப்படையிலான விளைபொருள்களையே நாம் மறுபடியும் தேர்வுசெய்ய வேண்டும்; இதன் மூலம் உள்ளூரின் பழங்குடியினருக்கு துணைநிற்க வேண்டும். ஆடைகளில்கூட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியின் கை ஓங்கியுள்ள நிலையில், இந்தக் கொள்கை நமக்கு தேவையானது. நாட்டின் மீது அக்கறையுள்ள மற்ற குடிமக்களைப் போல விலை மலிவான மாற்று துணிகளைத் தேர்வு செய்வதென்றால், இந்தியர்கள் நன்றாக உழைக்கக்கூடிய கைத்தறி துணி வகைகளை வாங்கி அவற்றை ஆதரிக்கவேண்டிய நேரம், இது ஆகும்.

உண்மையான தீர்வு என்பது விழிப்புணர்வில்தான் இருக்கிறது. வாசுதேவ குடும்பகம் எனும் நம் பரந்த குடும்பத்தை, உயிரிப்பன்மையம் மற்றும் புனிதத்தன்மையை வாழ்க்கையில் மீண்டும் கொண்டுவர வேண்டும். இலாபங்களுக்காக இயற்கைக்கு எதிரான போர்க்குணத்தை நாம் விட்டுவிட வேண்டும். அது தரும் அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். (இயற்கை என்பது செத்துப்போய் விட்டது; அது ஒரு உயிரற்ற பொருள் என்கிறபடியான) நம்முடைய நடவடிக்கைகளையும் நம்முடைய மொழியையும் மாற்றிக்கொள்ளவேண்டும். இயற்கையை குறிக்க ‘அது’ என்பதை விட்டுவிட வேண்டும்; இயற்கையை தெய்வம் என்று குறிப்பிட வேண்டும்; உண்மையிலும் அவள் அப்படியாகத்தானே இருக்கிறாள்.

இதையும் படிங்க:கோவிட்-19: பெரும் பாதிப்புக்குள்ளான 8 மாநிலங்களில் புதைந்திருக்கும் 60% ஜிடிபி!

ABOUT THE AUTHOR

...view details